பயணங்கள் ஓய்வதில்லை...

இரண்டு நாட்கள் இன்ப சுற்றுலா - கேரளம்.

                     நண்பர்களே, எனது குடும்பத்தினருடன்  இரண்டு நாட்கள் இன்ப சுற்றுலா மே மாதம் 10 ஆம் தேதி 2019  இரவு ஈரோட்டில் இருந்து கிளம்பி 12 ஆம் தேதி இரவு வரை இரண்டு நாட்கள் கேரள மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தோம். அந்த பயண அனுபவம் பற்றி இங்கு சொல்லவிருக்கிறேன்.


               திடீர் என்று என் மனைவியின் சகோதரிகள் குடும்பத்தினர் அவர்களின் மகன்கள் இந்த வருடம் பத்தாம் வகுப்பு செல்ல விருக்கிறார்கள் என்று கூறி அடுத்த ஒரு வருடம் படிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் இந்த கோடை விடுமுறையை ஒரு இன்ப சுற்றுலா சென்று வந்தால் அவர்களுக்கு புத்துணர்வு அளித்தது போல் இருக்கும் அனைவரும் செல்லலாம் என்று கூறியதால் நாங்கள் நான்கு குடும்பங்களை சேர்ந்த பெரியவர்கள் 10 பேர் சிறியவர்கள் 4 பேர் ஆக பதினான்கு பேர் ஒரு வாகனத்தை எடுத்து கொண்டு இரண்டு நாட்கள் கேரளா  இன்ப சுற்றுலா சென்று வந்தோம்.
மே 5 ஆம் தேதி தான்  இதை பற்றிய பேச்சு எங்கள் வீட்டு விருந்தின் போது ஆரம்பித்தோம்.(எங்கள் அன்பு மகன் வர்சன் காதணி விழா ) முதலில் நான் உடன்பாடு இல்லாமல் தான் எனது மனைவி கேட்டுக்கொண்டதற்கு சரி என்று அரை மனதாக ஒப்புக்கொண்டேன்.

            மூன்று நான்கு  நாட்கள் கழித்து வாகனம் பற்றிய பேச்சு வரும் போது தான் ஏற்பாடுகளை முன்னெடுத்து சென்ற என் சகலைகள் வாகனத்திற்கு எந்த முன்பணமும் கொடுத்து ஏற்பாடு செய்யவில்லை என்று தெரிந்தது. ஒரு வழியாக முன்பணம் அனுப்பி ஒரு வண்டியை முன்பதிவு செய்தோம். ஆனால் அவர்கள் புகைப்படம் அனுப்பிய வண்டி வேறு, அனுப்பிய வண்டி வேறு என்பது வேறு கதை. இரவு 10.30 மணிக்கு கிளம்பலாம் என்று திட்டமிட்டால் வண்டியோ 12.00 மணிக்கு தான் வந்து சேர்ந்தது.

 ( 1. வண்டி கொஞ்சம்  சுமார் தான், இரண்டு மூன்று நாட்கள் பயணம் செய்யும் போது நல்ல வண்டியாக பார்த்து முன்கூட்டியே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்பது ஒரு அனுபவம்.)


          கேரளா இன்ப சுற்றுலா செல்லலாம் என்று திட்டமிட்டாலும், சகலைகள் இருவரிடத்திலும் ஒரு பயண திட்டம் இல்லை என்று வண்டியில் அமர்ந்த உடன் அறிந்து கொண்டேன். அவர்கள் முன்பே அனுப்பிய பார்க்க வேண்டிய இடங்களில் முதலில் செல்லலாம் என்று சொன்ன குருவாயூர் வண்டி புறப்பட்ட பின்பு தான் அனைவருக்கும் தெரியும்.

 (2. எங்கு சென்றாலும் முன் கூட்டியே திட்டமிட்டு இங்கு இந்த நேரத்தில் புறப்பட வேண்டும் இந்த இடங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று திட்டமிடல் அவசியம், இல்லையென்றால் ஒரு தெளிவில்லாத பாக்க வேண்டிய இடங்களை பார்க்காமல் விட்டுவிட்டு வரவேண்டிய சூழ்நிலை வரும்.)

   
           ஆலப்புழா படகு இல்லத்தில் முன்பதிவு செய்து இருந்தது தவிர எந்த திட்டமிடலும் இல்லாமலே சென்றது, பார்க்க வேண்டிய இடங்களை தேர்வு செய்யாமல் போனது, வண்டி ஓட்டுனருக்கு போகவேண்டிய வரவேண்டிய எந்த சாலையும் தெரியாதது, கூகுளை மட்டும் நம்பி வண்டியை செலுத்தியதனால் நேரம், பணம் விரயம், பார்க்க வேண்டிய இடங்களை பார்க்காமல் வந்தது போன்ற தவறுகள் நிகழ்ந்தது.


(3. எங்கு சுற்றுலா சென்றாலும் அங்கே சென்று வந்தவர்களை ஆலோசனை கேட்பது, சாலை மார்க்கமாக சென்று நன்கு அனுபவம் உள்ள ஓட்டுனரை அழைத்து செல்ல வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றால் கூகிள் மேப்ஸ் நம்பியும் , மொழி தெரியாத நபர்களிடம் வழிகேட்டு விழி பிதுங்கி தான் நிற்க வேண்டும்.)


          முதலில் கொச்சி, ஆலப்புழா மற்றும் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சி, மலம்புழா நீர்த்தேக்கம் சென்று வரலாம் என்று இருந்த திட்டத்தை மாற்றி, வண்டி ஏறிய உடன் வண்டி குருவாயூர் நோக்கி கிளம்பியது, குருவாயூர் சென்றால், குளித்து உடை மாற்றி கோவிலுக்கு முன் சென்றால் நீண்ட வரிசையில் மக்கள் வெள்ளம் தரிசனத்திற்க்காக காத்து கொண்டு இருக்கிறது. யோசித்து பார்த்து வெளியில் இருந்தே சாமி கும்பிட்டு விட்டு கிளம்பி நேராக திருபரையூர்  சென்று ராமரை தரிசித்து விட்டு, கொச்சி செல்லும் வழியில் வளப்பாடு கடற்கரை இல் சிறிது நேரம் கழித்து விட்டு, காலை கொண்டு சென்ற காலை உணவையும் அருந்தி விட்டு நேராக செராய் கடற்கரை சென்றோம். 


(4. முன் ஏற்பாடாக தண்ணீர் எடுத்து செல்லாததால் வழியில் குடி தண்ணீர் வாங்க மிகவும் அவதிப்பட்டோம். எங்கு சென்றாலும் போதுமான குடி நீர் எடுத்து செல்ல வேண்டும் என்பது ஒரு அனுபவம்.)

           செராய் கடற்கரையில், நாங்கள் இருவர் மட்டும் குளித்தோம். கடலில் உப்பு தண்ணீர் என்பதால் வெளியில் ஒரு கட்டண  குளிக்கும் இடம் இருந்தது. ஆனால் அங்கும் கடல் நீர் போன்று தான் உப்பு தண்ணீர் தான் குழாயில் வந்தது கண்டு ஏமார்ந்தோம். செராய் கடற்கரையில் இருந்து நேராக கொச்சி நோக்கி சென்றோம். திட்டமிடல் இல்லாமல் சென்றதால் கொச்சியில் பார்க்க வேண்டிய இடங்களை பார்க்காமல் நேராக கொச்சியில் இருந்து குமரகம் நோக்கி கூகிள் மேப்ஸ் உதவியுடன் சென்று அங்கு என்ன பார்க்கவேண்டும், படகு பயணம் போக வேண்டுமா என்ற எந்த வித தெளிவும் இல்லமால் மாலை 5.30 மணிக்கு ஆலப்புழா படகு இல்லத்திற்கு செல்ல வேண்டும் என்ற வேகத்தில் எதுவும் பார்க்காமல் வண்டியிலேயே வட்டமிட்டு சுற்றி சுற்றி வந்து ஒரு வழியாக 5.30 மணிக்கு முன்பதிவு செய்து இருந்த படகு இல்லத்தருகில் வந்தால் அங்கிருந்து மீண்டும் வேறு இடத்திற்கு வேறு  ஒருவர்  படகில் தங்க முன்பதிவு செய்த நபர்கள் சேர்த்து விட்டார்கள்.
  
(5. எதற்கு முன்பதிவு செய்தாலும் நேரடியாக முன்பதிவிட்ட நபர்களுடனோ, நிறுவனத்துடைய சேவையோ நேரடியாக உபயோக படுத்துகிறமாதிரி செய்ய வேண்டும் இல்லை என்றால் கசப்பான அனுபவம் ஏற்படும். முன்பதிவு செய்த நிறுவனம் சேவையை சொல்லி முன்பதிவு செய்திருப்பார்கள், சேவை வழங்குபவர்கள் வேறு ஒருவராக இருந்தால் அவர்களிடம் எதுவும் கேற்க முடியாது.)


            மே 11 ஆம் தேதி இரவு ஒரு அரை மணிநேரம் உப்பங்கழி  நீரில் படகில் ( படகு வீடு) சுற்றி காண்பித்தார்கள் புதிய அனுபவமாக இருந்தது. மே 12 ஆம் தேதி காலை 8.00 மணி வரை படகிலேயே தங்கி இருந்தது முற்றிலும் புதுமையான மகிழ்ச்சியான அனுபவமாக அனைவருக்கும் அமைந்தது. படகு இல்லத்தில் வழங்கப்பட்ட  இரவு உணவு மற்றும்  காலை சிற்றுண்டி நன்றாக இருந்தது. பிறகு 8.00 மணிக்கு புறப்பட்டு மீண்டும் கொச்சி வந்து marine drive எனப்படும் படகு சவாரி செய்தோம். எங்கள் அன்பு மகன் வர்சன் மகிழ்ச்சியா விளையாடினான்.


(6. அங்கும் அவர்கள் எதுவும் சொல்லாமல் ஒருவருக்கு நூறு ரூபாய் என்று பேசி ஒரு படகில் மெதுவாக ஒரு மணி நேரம் உப்பங்கழியில் சுற்றி காண்பிக்கிறார்கள். marine drive என்பது  உப்பங்கழியில் இருந்து கடலுக்குள் விசைப்படகில் சிறிது தூரம் சென்று வருவது தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நன்கு விசாரிக்காமல் உடனே படகில் ஏறி சென்றது தவறு என்று புரிந்தது. அனுபவ பாடம்.)


          கொச்சியில் அடுத்து பார்த்து பிரமித்தது  லூலூ மால், லூலூ மால் எனப்படும் இந்தியாவிலேயே மிகப்பெரிய மாலில் சிறிது நேரம்  கழிந்தது. அடுத்து மதிய உணவு அருந்தி விட்டு ( ஒரு சுமாரான உணவகத்தில்) அதிரம்பள்ளி  நீர்வீழ்ச்சியை நோக்கி பயணம் ஆனோம். நீர்விழ்ச்சில் குளிக்க அனுமதி இல்லாததால் வரும் வழியில் ஆற்று நீரில் அரை மணி நேரம் குளித்து விட்டு புறப்பட்டோம்.

(7. போன பிறகு தான் தெரிந்தது , நீர் வீழ்ச்சியை தூரத்தில் இருந்து பார்த்து மட்டும் வர வேண்டும், நீருக்கு அருகில் கூட செல்வதற்கு தடை என்று. அதற்க்கு ஒரு நபருக்கு நாற்பது ரூபாய் கட்டணம் வேறு. மக்களே தயவு செய்து அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சியில் குளிக்கலாம் என்று கனவோடு சென்று விடாதீர்கள். குளிக்க அனுமதி இல்லை.)


         ஒரு வழியாக மாலை 6.30 மணிக்கு ஈரோடு நோக்கி புறப்பட்டோம், வரும் வழியில் இரவு உணவு அருந்திவிட்டு மீண்டும் தண்ணீரில்லாமல் அவதிப்பட்டோம்.  இரவு 12.00 மணிக்கு வீடு சென்று அடைந்தோம்.   திட்டமிடாமல் சென்றதால் அவதிப்பட்டாலும், இரண்டு நாட்கள் சுற்றுலா சென்று    பல்வேறு இடங்களை பார்த்து வந்தது மனதிற்கு புத்துணர்வு ஊட்டும் விதமாக அமைந்தது. ஆம் பயணங்கள் ஓய்வதில்லை. புதிய அனுபவம், புதிய இடங்கள், வருடம் ஒரு முறையாவது குடும்பத்துடன் சுற்றுலா  சென்று வர வேண்டும். நன்றி வணக்கம்.




mtp://[usb:003,006]/Internal%20shared%20storage/DCIM/Camera/IMG_20190512_121242.jpg


mtp://[usb:003,006]/Internal%20shared%20storage/DCIM/Camera/IMG_20190512_104807.jpg
           












Popular posts from this blog

Magic of Learning.......

Change